திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கும், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் வரைக்கும் பந்தயம் கட்டி குதிரை வண்டிகளை ஓட்டுகின்றனர். இவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் பவனி வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் இங்கும் அங்கும் சென்று விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு தூரம் அதிக வேகமாக குதிரை வண்டி ஓட்டிச் செல்லும் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 16-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக குதிரை பந்தயம் நடத்திய வாணியம்பாடியை சேர்ந்த பிரேம் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து, அவவிடமிருந்து குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.