கஞ்சா விற்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட 5 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா விற்ற பா.ஜ.க. நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள நெல்லூர் கருங்குளம் கண்மாய் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 5 பேர் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், சித்தரேவு அமைதிபூங்கா பகுதியை சேர்ந்த கார்த்திகை ராஜா (வயது 39), நெல்லூர் காலனியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (29), திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (53), பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (47) உள்பட 5 பேர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சுரேஷ்குமார், வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய பா.ஜ.க. வர்த்தக பிரிவு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.