சட்டவிரோதமாக மதுவிற்ற 179 பேர் கைது

மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 179 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நாமக்கல்லில் நடந்த மதுக்கூட உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பேசினார்.;

Update: 2023-06-06 18:45 GMT

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் வெளிமாநில மதுபானங்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா?, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, அனுமதியற்ற மதுக்கூடங்கள் செயல்படுகிறதா? மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் டாக்டர் உமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டு இருந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கமலக்கண்ணன் தலைமையில், உதவி ஆணையர் (கலால்) செல்வி மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சட்டவிரோதம் மது விற்பனையை தடுக்க டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மதுக்கூட உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா முன்னிலை வகித்தார்.

179 பேர் கைது

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ பேசியதாவது:-

அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே மதுபானங்களை அருந்த அனுமதிக்க வேண்டும். மதுபானங்களை பதுக்கி வைக்கக்கூடாது. விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் மதுக்கூடங்களை நடத்த வேண்டும். விதிமீறலில் ஈடுபடுபவர்களின் மதுக்கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

கடந்த மாதம் 15-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 22 நாட்களில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதில் கெடமலையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அனுமதி இல்லாத மதுக்கூடங்கள் மற்றும் சந்துக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்தது, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றது என்பது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் 179 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2,388 மதுபாட்டில்கள், மொபட் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கூடங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்