விவசாயிகளை தாக்கிய கேரள வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே விவசாயிகளை தாக்கிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி. விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை அவரது தோட்டத்தின் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுந்தரபாண்டி, அவரது நண்பரான விவசாயி முத்தையா என்பவரும் வந்தனர்.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த வாலிபரிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது அவர் மலையாளத்தில் பதில் கூறினார். மேலும் திடீரென்று 2 பேரையும் அந்த வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேரையும் கத்தியால் குத்த முயன்றார்.
இதையடுத்து சுந்தரபாண்டியும், முத்தையாவும் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் மீட்டு, நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முகமது பைசல் (வயது 27) என்பது தெரியவந்தது. பின்னர் தங்களை முகமது பைசல் கத்தியால் தாக்க வந்ததாக முத்தையா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பைசலை கைது செய்தனர்.