கஞ்சா கடத்தல் வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-12 17:40 GMT

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கஞ்சா கடத்திய வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த தெய்வேந்திரன், அவருடைய மகன் வைஷ்ணவகுமார் ஆகிய 2 போரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான தெய்வேந்திரனிடம் மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும், ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே அகனம்புடி பெடமடகா பகுதியில் உள்ள உப்பரா காலனியை சேர்ந்த அகரப்பு யுதேந்தர் மனைவி ராஜலட்சுமி என்ற ராஜகுமாரி (வயது 50) என்பவரிடம் கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து ராஜகுமாரியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி, தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி அருகே நுக்கம்பேட்டையில் பதுங்கியிருந்த ராஜகுமாரியை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவருடன் கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக நாமக்கல் மாவட்டம் குரப்பாளையம் குள்ளப்பன்நகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (24), ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சுரேஷ் மகன் சரண் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்