மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவில் விழாவுக்காக உறவினர் வீட்டுக்கு வந்த மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-20 16:57 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவில் விழாவுக்காக உறவினர் வீட்டுக்கு வந்த மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பாப்பம்பாடி அம்மன் கோவில் திருவிழாவுக்கு திருப்பூரில் வசிக்கும் தனது சித்தி மகள் அஞ்சலி (வயது 20) என்பவரை அழைத்தார். இதனையடுத்து அஞ்சலி தனது கணவர் செட்டே என்ற சீனிவாச முல்லாகவுடு (23) மற்றும் 2 குழந்தைகளுடன் பாப்பம்பாடிக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மராட்டிய மாநில போலீசார் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனை தொடர்பு கொண்டனர். அப்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து தப்பி வந்த மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த செட்டே என்ற சீனிவாச முல்லாகவுடு பாப்பம்பாடியில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதனையடுத்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருடன் இணைந்து மராட்டிய போலீசார் செல்போன் கோபுரம் மூலம் ெசட்டே இருக்கும் இடத்தை உறுதிப்படுத்தினர். உடனடியாக போலீசார், அவர் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ஏ.பள்ளிபட்டி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தீவிர விசாரணை நடத்தினார்.

அப்போது மராட்டிய மாநிலம் தாமராஜா போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் செட்டே மீது மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தது, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது என 11 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் மராட்டிய மாநிலம், களிரோலி மாவட்டம், தவுசில்விவேரி தாலுகா தாமராஜா அடுத்த பங்காரப்பேட்டையில் இருந்து மனைவி அஞ்சலி மற்றும் குழந்தைகளுடன் தமிழகத்திற்கு தப்பி வந்ததும் தெரியவந்தது.

கைது

பிறகு திருப்பூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தபோது இவரின் செல்போன் உரையாடலை மராட்டிய போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு மேலாக இவரது செல்போன் இருப்பிடம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பாப்பம்பாடியை காட்டியது. இதையடுத்து மராட்டிய போலீசார் தர்மபுரி போலீசாருடன் இணைந்து செட்டேவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து அதிகாலை வரை ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், உளவுப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் மராட்டிய மாநிலத்திற்கு செட்டேவை அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்