மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை

மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்தார்.

Update: 2022-11-26 16:58 GMT

மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார்.

நகர் நல அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், பாலமுருகன், முருகன், லூர்துசாமி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சியின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா கூறியதாவது:-

வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் அதிகமாக வருகிறது. ஆங்காங்கே கொட்டப்பட்டு தீ வைத்தும் எரிக்கின்றனர். தூய்மை பணியாளர்களால் பெறப்படும் குப்பைகள் உரமாக்கப்படுகிறது.

இதில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் கொடுப்பதால் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாடுகள் தொல்லை

மாநகராட்சியில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது-. இதை தொடர்பாக புகார்கள் வருகிறது. மாடுகள் பிடிக்கப்பட்டாலும் மீண்டும் சாலையில் தான் அவிழ்த்து விடுகின்றனர்.

எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி, போக்குவரத்து போலீசார், மிருகவதை தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிடிக்கப்படும் மாடுகளுக்கு காதுகளில் உரிமையாளர்களின் பெயர் விவரம் உள்ளிட்ட டேக் போடப்படும்.

தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

பன்றிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அதை கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் இருந்து பன்றிகளை பிடிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். பிடிக்கப்படும் பன்றிகளை அவர்கள் மதுரைக்கு எடுத்துச் செல்ல உள்ளனர். பன்றிகள் உரிமையாளருக்கு திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.

நகரில் உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அதிக அளவு மிதக்கிறது.

உரிமம் இல்லாத குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், உரிமம் பெறாத குளிர்பானங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானம், குடிநீர் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மேலும் விற்பதை தடுக்க வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

நாய்களுக்கு கருத்தடை

நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அடுத்த வாரம் திறக்கப்படும் கருத்தடை மையத்தில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அதிகளவு பயணிகள் வருவதால் அவர்களில் பலர் ஆங்காங்கே சிறுநீர் கழிக்கின்றனர். எனவே அங்கு சிறுநீர் கழிக்குமிடம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்