ஜாமீன் கையெழுத்திட வந்தவரை வெட்டிய சம்பவத்தில் மேலும் 2 பேர் சிக்கினர்

ராமநாதபுரத்தில் கோர்ட்டு வளாகத்திற்குள் புகுந்து ஜாமீன் கையெழுத்திட வந்தவரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-04 18:45 GMT

ராமநாதபுரத்தில் கோர்ட்டு வளாகத்திற்குள் புகுந்து ஜாமீன் கையெழுத்திட வந்தவரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுட்டு பிடித்தனர்

ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அசோக்குமார் (வயது 28). இவர் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று ராமநாதபுரம் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை அசோக்குமார் கையெழுத்திட வந்தபோது முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கிக்குமார் (26) நீதிமன்ற வளாகத்தில் விசாரணை அறைக்குள் புகுந்து அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த அசோக்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கொக்கிக்குமாரை பிடிக்க முயன்றபோது அவர் ஆயுதத்தால் போலீசாரை தாக்கினார். இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொக்கி குமாரை பிடித்தனர்.

மேலும் இருவர் கைது

போலீசாரின் விசாரணையில் அசோக்குமாரை கொக்கிகுமாருடன் சேர்ந்து, ஆர்.எஸ்.மடை ஜமுனா சண்முகநாதன்(25) தாக்கியதும், ஆர்.எஸ்.மடை போண்டா அஜித்(26) என்பவர் தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி 3 பேரும் தப்பி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதன் மற்றும் போண்டா அஜித் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அருகே ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் கத்தியால் தாக்கிய சம்வத்தில் 3 பேரும் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரிவான அறிக்கை

கொக்கி குமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் கொக்கிக்குமார் குணமடைந்ததும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்