ஈரோட்டில் நில மீட்பு இயக்கம் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்கும் போராட்டம்- ஊர்வலமாக வந்த பெண்கள் உள்பட 330 பேர் கைது
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரிய மாரியம்மன் கோவில்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கொங்கு மண்டல அளவில் புகழ் பெற்றதாகும். பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான நடுமாரியம்மன் (சின்னமாரியம்மன்), காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் திருவிழாக்கள் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழாக்கள் தொடங்கின.
25-ந் தேதி கம்பம் நடப்பட்டது. 30-ந் தேதி கொடியேற்று விழா நடந்தது. 4-ந் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழாவும், நேற்று முன்தினம் சின்னமாரியம்மன் கோவிலில் தேர் வடம்பிடிக்கும் நிகழ்வும் நடந்தன.
பொங்கல் விழா
நேற்று முன்தினம் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவாகும். பக்தர்கள் வீடுகளிலேயே பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இங்கு கோவிலை ஒட்டி பக்தர்கள் பொங்கல் வைக்க போதிய இடம் இல்லை. எனவே கோவிலையொட்டி இருக்கும் இடத்தில் பெரிய மாரியம்மனுக்கு பிரமாண்ட கோவில் கட்டவும், பக்தர்கள் பொங்கல் வைக்கும் வசதிகள் செய்யவும் வேண்டும் என்று இந்து மத அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
போராட்டம்
அதன்படி இந்த ஆண்டும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்பேரில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நேற்று ஏராளமான ஆண்களும், பெண்களும் குவிந்தனர். போராட்டத்துக்கு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் தலைவர் ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியும், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.சரஸ்வதி போராட்டத்தை தொடங்கி வைத்தார். பா.ஜனதா வக்கீல் அணி மாநில நிர்வாகி என்.பி.பழனிச்சாமி, பிரசார அணி நிர்வாகி ஏ.சரவணன், மகளிர் அணி புனிதம் ஆகியோர் பேசினார்கள்.
ஊர்வலம்-கோஷம்
பின்னர் பொங்கல் வைக்கும் போராட்ட குழுவினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பெண்கள் சிலர் விறகு, மண் பானைகளை ஏந்திக்கொண்டு முன்னால் சென்றனர். அவர்களுடன் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ.வும் ஊர்வலமாக நடந்து சென்றார். கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி வழியாக ஊர்வலம் சென்றது. மகிமாலீஸ்வரர் கோவில் அருகே போராட்டக்குழுவினர் சென்றபோது, அங்கு ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், ஈரோடு டவுன் துணை போலீஸ் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன், இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி (டவுன்), சோமசுந்தரம் (தாலுகா), தீபா (மொடக்குறிச்சி), நிர்மலாதேவி (அனைத்து மகளிர்) ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அவர்கள் போராட்டக்குழுவினரை தடுத்து, பொங்கல் வைக்கும் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படியும், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் கூறினார்கள். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி போராட்டக்குழுவினர் தொடர்ந்து செல்ல முயற்சித்தனர்.
மேலும், ஜெய் ஜெய் மாரியம்மா, ஜெயித்து விட்டாள் மாரியம்மா, பொங்கல் வைப்போம் பொங்கல் வைப்போம் மாரியம்மன் கோவில் நிலத்தில் பொங்கல் வைப்போம். 80 அடி சாலை அமைக்க தமிழக அரசே தயக்கம் ஏன்?. பிச்சை கேட்கும் போராட்டமல்ல, உரிமைக்கான போராட்டம் என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
வேனில் ஏறிய எம்.எல்.ஏ.
இதைத்தொடர்ந்து போலீசார் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட முக்கிய நிர்வாகிகள், தாங்கள் கைது செய்யப்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், போராட்ட குழுவினர் மத்தியில் வக்கீல் என்.பி.பழனிசாமி பேசும்போது, 'பல ஆண்டுகளாக பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு மற்றும் பொங்கல் வைக்கும் உரிமை போராட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறோம். நமது வெற்றியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினரின் பங்கும் உள்ளது. எனவே இப்போது அவர்களின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கைதாகி, நமது கோரிக்கை வலுப்பெற செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் போராட்டக்குழுவினர் போலீஸ் வேனில் ஏறினார்கள். இதுபோல் போராட்டத்தை முன்னெடுத்து முன் வரிசையில் வந்து கொண்டிருந்த டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. போலீசார் கொண்டு வந்த தனியார் பள்ளிக்கூட வேனில் ஏறினார். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள், வேனில் வர வேண்டாம் என்றும் போராட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்றும் அவரிடம் கூறி காரில் வழியனுப்பி வைத்தனர்.
330 பேர் கைது
இந்த போராட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் சண்முகசுந்தரம், ஜெகதீசன், அசோக்குமார், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஜெகதீசன், பா.ஜனதா நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், வக்கீல் ஈஸ்வரமூர்த்தி, என்ஜீனீயர் ஜெ.சரவணன், ஆற்றல் அசோக்குமார், ரம்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரையும் போலீசார் வேன் மற்றும் தனியார் பள்ளிக்கூட பஸ்களில் ஏற்றிக்கொண்டு, திண்டல் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர். இதில் 218 பெண்கள் உள்பட 330 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.