ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த 2 வாலிபர்கள் கைது- 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைரம் மீட்பு

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2023-04-06 21:40 GMT

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை அடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள் மீட்கப்பட்டன.

கிரானைட் தொழில்

ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி மஞ்சுளா தேவி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் மஞ்சுளா தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சாமி தரிசனம் செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்கு சென்றார்.

பின்னர் அவர் கடந்த மாதம் 15-ந்தேதி ஈரோடு வந்தார்.

நகை -பணம் கொள்ளை

அப்போது மஞ்சுளா தேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த லாக்கரும் (பாதுகாப்பு பெட்டகம்) உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 ஜோடி வைர கம்மல், ஒரு ஜோடி வைர வளையல், 4 வைர மோதிரங்கள், 7 ஜோடி தங்க கம்மல், 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை மற்றும் தங்ககாசு, நெக்லஸ் என மொத்தம் 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

2 வாலிபர்கள் கைது

இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மஞ்சுளா தேவி வீட்டில் கொள்ளை அடித்த, பெங்களூருவை சேர்ந்த குணா (22), நவீன்குமார் (23) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்கள் கஞ்சா, மது போதைக்கு பணம் தேவைப்பட்டதால் மஞ்சுளா தேவி வீட்டில் கொள்ளை அடித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் குணா, நவீன்குமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 42 பவுன் தங்கம், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மீட்கப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து 2 வாகனம், 2 கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன. குணா, நவீன்குமார் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்