நல்லம்பள்ளி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலன் கைது

Update: 2023-02-25 18:45 GMT

நல்லம்பள்ளி:

இண்டூர் அருகே உள்ள கீழ்குள்ளம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 35). இவர் நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரத்தில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கீழ்குள்ளம்பட்டியை சேர்ந்த முருகன் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேல், மணிமேகலையை, ஏலகிரியான்கொட்டாயில் உள்ள மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மணிமேகலை வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக மணிமேகலை, முருகனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இது முருகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மணிமேகலை பணியை முடித்து கொண்டு, கார்மெண்ட்சில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த முருகன் அரிவாளால் மணிமேகலையை வெட்டினார். இதில் அவருடைய கையில் வெட்டு விழுந்தது. அங்கிருந்தவர்கள் மணிமேகலையை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பேச மறுத்த பெண்ணை, கள்ளக்காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்