கோட்டப்பட்டி அருகே முன் விரோதத்தில் விவசாயியை கழுத்தை நெரித்து கொன்றவர் கைது

Update: 2023-01-20 18:45 GMT

அரூர்:

கோட்டப்பட்டி அருகே முன் விரோதத்தில் விவசாயியை கழுத்தை நெரித்து கொலை செய்த பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி கொலை

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55). விவசாயி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் விவசாய தோட்டத்திற்கு சென்று பார்த்தனர்.

அங்கு கழுத்தில் காயத்துடன் மனோகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோகரனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது மனோகரன் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

முன்விரோதம்

மேலும் மனோகரனின் குடும்பத்தாருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் மற்றும் சென்றாயன் குடும்பத்தாருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சென்றாயனின் மகன் கார்த்திக் (32) என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலீசில், திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

கைது

பொக்லைன் டிரைவரான கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்கின் குடும்பத்தினருக்கும், மனோகரனுக்கும் ஏற்கனவே நில பிரச்சினை உள்ள நிலையில் கார்த்திக்கின் மனைவி மனோகரனிடம் சகஜமாக பேசி பழகியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிலர் கார்த்திக்கிடம் கூறியுள்ளனர்.

இதனால் மனோகரன் மீது கார்த்திக்குக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பவத்தன்று இரவு மனோகரன் இருக்கும் தோட்டத்திற்கு கார்த்திக் சென்றுள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த மனோகரனை கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த கோட்டப்பட்டி போலீசார் நேற்று கார்த்திக்கை கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்