புல்லட்டை தேடிவந்த வாலிபர் கைது

புல்லட்டை தேடிவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-03 16:34 GMT


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் பிளக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் திசைவீரபாண்டியன் மகன் குமரேச பாண்டியன் (வயது38). இவரின் கடையை சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தினை திருடிச்சென்று விட்டனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் பால்கரை பகுதியை சேர்ந்த அஜித் என்ற அப்துல் அஜீஸ் (வயது24), ரமேஷ் மகன் ரியாஸ் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அஜித் என்ற அப்துல் அஜீஸ் கடந்த 30-ந் தேதி ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இவர் பால்க்கரை அருகில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்று வந்ததை அப்பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரை கண்காணித்து மடக்கி பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் மேற்கண்ட வழக்கில் சிக்குவதற்கு முன்னர் புல்லட் ஒன்றினை திருடியதாகவும் அதனை பால்க்கரை காட்டு பகுதிக்குள் மறைத்து வைத்தது தெரியவந்தது. இவர் திருடி மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் புல்லட்டை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அஜித் என்ற அப்துல்அஜீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்