கல்லூரி மாணவியை கம்பியால் அடித்துக்கொன்ற காதலன் கைது

கல்லூரி மாணவியை கம்பியால் அடித்துக்கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். தன்னிடம் பேசுவதை தவிர்த்து உதாசீனப்படுத்தியதால் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2022-09-27 18:45 GMT

காரைக்குடி, 

கல்லூரி மாணவியை கம்பியால் அடித்துக்கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். தன்னிடம் பேசுவதை தவிர்த்து உதாசீனப்படுத்தியதால் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கல்லூரி மாணவி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் சினேகா(வயது 22).

இவர் காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இவரும், இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன்(28) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சினேகாவை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி அவரது வீட்டுக்கு ெசன்று கண்ணன் பெண் கேட்டதாகவும், அதற்கு சினேகாவின் பெற்றோர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,. சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதற்குப்பின் சினேகாவுக்கும், கண்ணனுக்கும் இடையே காதலில் விரிசல் ஏற்பட்டது..

கம்பியால் அடித்துக்கொலை

சம்பவத்தன்று மாத்தூர் ரேஷன் கடை அருகே சினேகாவை சந்தித்து, கண்ணன் பேச முயன்றபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் சினேகாவை தலையில் அடித்துக் கொன்றுவிட்டு தப்பிஓடிவிட்டார். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்குடிைய அடுத்த அரியக்குடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மாணவியை கொலை செய்த கண்ணன் என்பது தெரியவந்தது.

போலீசார் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவர் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்திருந்தாராம்.. மேலும் மதுபாட்டிலும், எலி மருந்தும் வைத்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாக்குமூலம்

கண்ணன் அளித்துள்ள வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:- நானும், சினேகாவும் காதலித்தோம். அவரை திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோரிடம் பெண் கேட்டு சென்றேன். ஆனால் நான் கட்டிட தொழிலாளி என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அதன்பின்னர் சினேகா என்னிடம் பேசுவதை தவிர்த்து உதாசீனப்படுத்தினார்.

இதனால் எனக்கு அவர் மீதும் ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவரிடம் நான் எவ்வளவோ கேட்டும் அவர் என்னை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் கோபத்தில் அவரை அடித்துக்கொன்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்