மாணவிக்கு பாலியல் தொல்லை: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.;
கருப்பூர்:
பல்கலைக்கழக பதிவாளர்
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) பதவி வகித்து வருபவர் டி.கோபி (வயது 45). வேதியியல் துறை பேராசிரியரான இவர் கடந்த மே மாதம் முதல் பதிவாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகும். இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சேலம் சித்தர் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகிறார். இதனிடையே விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை பதிவாளர் கோபி, அந்த மாணவியை ெசல்போனில் தொடர்பு கொண்டு, ஆராய்ச்சி மேற்படிப்பு பாடம் தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாகவும், உடனே பல்கலைக்கழகத்தில் தான் தங்கி இருக்கும் குடியிருப்புக்கு வருமாறும் கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை
இதையடுத்து மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் கோபி தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்றார். அப்போது உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்தனர். மாணவி மட்டும் குடியிருப்புக்குள் சென்று பதிவாளர் கோபியை தனியாக சந்தித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்த மாணவி, குடியிருப்புக்கு அருகே காத்திருந்த தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் பதிவாளர் கோபியை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கோபி, சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பதிவாளர் கைது
இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி, கருப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று பதிவாளர் கோபி மீது புகார் அளித்தார். அதே போல தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக பதிவாளர் கோபியும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை, பெண்களை சீண்டுதல், தொடர்ந்து தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவாளர் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் கோபியிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் விசாரணை நடத்தினர். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பரபரப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட சாதி குறித்த கேள்வியால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் தற்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.