காதலியுடன் சேர்ந்து 4 மாநிலங்களில் பணம் பறித்த வாலிபர் கைது
வேலை வழங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து 4 மாநிலங்களை கலக்கிய வாலிபரை ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.;
ராமநாதபுரம்,
வேலை வழங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து 4 மாநிலங்களை கலக்கிய வாலிபரை ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
புகார்
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த சக்திகுமார் என்பவரின் மனைவி மனோஜா(வயது 22). இவர் இணையதளம் மூலமாக ஆன்லைனில் வேலைக்காக பணம் கட்டி ரூ.25 ஆயிரத்தை இழந்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் மனோஜாவை தொடர்பு கொண்ட எண்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்ததாக இருந்ததையும், வங்கி கணக்கு எண் தகவல்களையும் சேகரித்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். அவரின் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பெங்களூரு சென்றனர். அங்கு அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த மாருதி (வயது 22) என்ற வாலிபரை பிடித்தனர்.
போலி வேலைவாய்ப்பு நிறுவனம்
மாருதி பி.காம் படித்துள்ளார். கல்லூரியில் படித்தபோது, எசாஸ்வினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி படிப்பிற்கு பிறகு 6 மாத காலம் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, வேலை தருவதாக கூறினால் எவ்வாறு ஏமாற்றலாம் என்பதை தெரிந்து கொண்டார். பின்னர் காதலி எசாஸ்வினியுடன் இணைந்து போலியாக ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
பின்னர் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என மொழி வாரியாக இளம்பெண்களை ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி உள்ளனர். இவர்களுக்கு எசாஸ்வினி ஆங்கில புலமையுடன் பேச பயிற்சி அளித்துள்ளார்.
பிரபல வேலைவாய்ப்பு தேடுவோருக்கான இணைய தளத்திடம் இருந்து ரூ.30 ஆயிரம் கொடுத்து வேலைதேடும் நபர்களின் விவரங்களை பெற்று பணம் பறிப்பு வேலையில் இறங்கி உள்ளனர்.
கைது
இந்த அதிர்ச்சி தகவலை கேட்ட தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 மடிக்கணினிகள், 5 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதாரண செல்போன்கள், பணபரிமாற்ற பதிவேடுகள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாருதி இதுபோன்று தமிழகம், கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த காதலி எசாஸ்வினியை போலீசார் தேடி வருகின்றனர்.