கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியவர் கைது
தொண்டியில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்துவாங்கியவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தொண்டி,
தொண்டியில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்துவாங்கியவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்துவட்டி
தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று மகாசக்திபுரம் கடற்கரைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த நைனா பிள்ளை என்பவர் மகன் நாகூர்கனி (வயது 44) என்பவர் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரை ரகசியமாக கண்காணித்து உள்ளனர்.
அப்போது அவர் கையில் நீளமான நோட்டு ஒன்றை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று தரக்குறைவாக பேசி மிரட்டி பணம் வசூலித்து கொண்டிருந்தாராம். மேலும் அவரை போலீசார்கண்காணித்து பின்தொடர்ந்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
கைது
அதனைத்தொடர்ந்து கையில் வைத்து இருந்த நீளமான நோட்டுடன் நாகூர் கனியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் நாகூர் கனியை கைது செய்ததை கண்டித்து அவரது உறவினர்கள் தொண்டி போலீஸ் நிலையம் முன்பு ஒன்றுகூடி நாகூர்கனியை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்போம் எனக்கூறி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அதிகாரிகள் விளக்கம் அளித்தும் கேட்காமல் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை
இதுதொடர்பாக தலைமை காவலர் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் தொண்டியை சேர்ந்த தொண்டிராஜ், பார்த்திபன், செல்வம், சத்தியராஜ், காளிதாஸ், நாகூரம்மாள், புவனேஸ்வரி, சித்ரா உள்பட 24 பேர் மீது தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.