எடப்பாடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்தவர் கைது

எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-11 20:29 GMT

எடப்பாடி

எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மளிகை கடைக்காரர்

எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். நேற்று குமாரின் மளிகை கடைக்கு டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அந்த நபர் தான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததால் கடையை சோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறினார். பின்னர் கடைக்குள் புகுந்த அந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த குமார், போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார்.

கைது

இதனால் அந்த நபர் குளிர்பான பாட்டிலை உடைத்து குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி, கடையில் இருந்த ரூ.21 ஆயிரத்து 500 ஐ எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் இதுகுறித்து எடப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் என கூறி மளிகை கடைக்காரரை மிரட்டி பணம் பறித்து சென்றவர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிபாளையம் அருகே சுற்றித்திரிந்த மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்