பெத்தநாயக்கன்பாளையம் அருகேகாதல் விவகாரத்தில் மைத்துனர் அடித்துக்கொலைமுன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் விவகாரத்தில் மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-10 19:56 GMT

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே காதல் விவகாரத்தில் மைத்துனர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாய்மாமன் மகளுடன் காதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவருடைய மகன் பிரசாந்த் (28). இவரும், அவருடைய தாய்மாமன் முருகேசன் மகள் கல்பனா (18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 28-ந் தேதி கல்பனா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை காணவில்லை என கல்பனா குடும்பத்தினர் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே கல்பனாவும் பிரசாந்தும், ஈரோடு மாவட்டம் பவானியில் குணசேகரனின் தம்பி வெள்ளிங்கிரி வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பவானி சென்று கல்பனா, பிரசாந்த் இருவரையும் அழைத்து வந்தனர்.

பெற்றோருடன் சென்ற பெண்

இதைத்தொடர்ந்து இருதரப்பையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்பனா தன்னுடைய பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனால் போலீசார் கல்பனாவை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த காதல் விவகாரம் தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த குணசேகரன் தரப்பினரும், முருகேசன் தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிதாப சாவு

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் குணசேகரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து வந்து குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மோதல் வழக்காக போலீசார் பதிவு செய்து இருந்தனர். குணசேகரன் இறந்ததால் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக முருகேசன் (52), அவருடைய மனைவி முத்தம்மாள் (45), முருகேசன் தம்பி சிவகுமார் (50), சிவகுமார் மனைவி தமிழரசி (42) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முருகேசன், சிவகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான சிவகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது தென்னம்பிள்ளையூர் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்