மேட்டூரில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது:பிச்சை எடுக்கும் தகராறில் கொன்ற தொழிலாளி கைதுபரபரப்பு வாக்குமூலம்
மேட்டூரில் கழுத்து அறுத்து ெகாலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிச்சை எடுக்கும் தகராறில் அடித்துக்கொன்றதாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மேட்டூர்
மேட்டூரில் கழுத்து அறுத்து ெகாலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிச்சை எடுக்கும் தகராறில் அடித்துக்கொன்றதாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கழுத்து அறுத்து கொலை
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையம் 4 ரோடு பகுதியில் நேற்று முன்தினம் காலையில் முதியவர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ெகாலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்தனர். இதில் இறந்தவர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கீரியாம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பதும், இவருக்கு கமலா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என தெரியவந்தது.
இவர் மேட்டூரில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை முன்பு நின்று கொண்டு அங்கு வந்து செல்வோர்களிடம் 5 ரூபாய், 10 ரூபாய் என்று பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் சரண்
இந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டதாக மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக் (38) என்பவர் பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மேட்டூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் மேட்டூரில் உள்ள மதுபான கடைகள் முன்பு நின்று கொண்டு அங்கு வருவோரிடம் 5 ரூபாய், 10 ரூபாய் என யாசகம் பெற்று மது அருந்துவேன். இந்த நிலையில் எனக்கு போட்டியாக முருகேசனும் நான் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு பணம் பிச்சை கேட்பார்.
இதனால் எங்கள் இருவருக்கும் இடையே யாசகம் பெறுவதில் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் இதுபோல் தகராறு ஏற்பட்ட போது, முருகேசன் என்னை தகாத வார்த்தையால் திட்டி விட்டார்.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த நான், விறகு வெட்டும் அரிவாளை எடுத்துக்கொண்டு கடந்த 30-ந் தேதி இரவு அனல் மின் நிலைய 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே சென்றேன். அங்கு முருகேசன் படுத்திருந்தார்.
அறுத்து கொன்றேன்
முருகேசனை பார்த்தவுடன் கோபத்தில் நான் ெகாண்டு சென்ற அரிவாளால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன். பின்னர் போலீசார் என்னை தேடுவதை அறிந்து பி.என்.பட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.