விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-29 17:01 GMT


திருமூர்த்தி அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குண்டடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

திருமூர்த்தி அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குண்டடம்-உப்பாறு அணை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். குண்டடம் வட்டார தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசும்போது "திருமூர்த்தி அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

ஒட்டன்சத்திரத்திற்கும் தண்ணீர் கொண்டு சென்றால் பி.ஏ.பி. பாசன பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும். பி.ஏ.பி. பாசனம் பெறும் கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களை நாடி செல்ல வேண்டி வரும். இது பி.ஏ.பி. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். எனவே இந்த திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றனர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், கொள்கை பரப்பு செயலாளர் ராசு, மாநில செயலாளர் கதிர்வேல், மாவட்ட தலைவர் வேலுசாமி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்