ராணுவ எழுத்துத்தேர்வு
அக்னிபாத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, டிரேட்ஸ்மேன், கிளார்க், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு வீரர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்புக்காக நடந்த உடற்தகுதி தேர்வில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்பட 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்ட எழுத்துத்தேர்வு திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த எழுத்துத்தேர்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். முன்னதாக ராணுவ எழுத்துத்தேர்வையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கல்லூரி முன்பு நேற்று முன்தினம் இரவே குவிந்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் நேற்று அதிகாலை 3 மணி முதல் இளைஞர்களை வரிசையில் நிற்க வைத்தனர். பின்னர் ஒவ்வொருவராக சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
எழுத்துத்தேர்வு
நேற்று காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெறும் வீரர்கள் பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படுவார்கள். இதற்கிடையே ஏற்கனவே உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்ட எழுத்துத்தேர்வு நடைபெறுவது தெரியாமல் புதிதாக ஆட்கள் சேர்ப்பதாக நினைத்து பல இளைஞர்களும், பெண்களும் வந்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு விளக்கம் அளித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.