மோட்டார்சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் சாவு
கடமலைக்குண்டு அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.;
உத்தமபாளையம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 27). இவர், காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த மாதம் 27-ந்தேதி தமிழ்ச்செல்வன் குமணன் தொழுவில் இருந்து மோட்டார்சைக்கிளில் கருநாக்கமுத்தன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். கடமலைக்குண்டு அருகே சாலையின் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடியது. இதில் சாலையில் விழுந்த தமிழ்ச்செல்வன் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுய நினைவை இழந்த தமிழ்ச்செல்வனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து கடந்த 10-ந் தேதி மேல் சிகிச்சைக்காக தமிழ்ச்செல்வன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.