கழிவுநீரால் நிரம்பிவரும் அரியலூர் செட்டிஏரி

அரியலூர் செட்டி ஏரிக்கு வரும் கழிவு நீரைதடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.;

Update: 2022-09-21 17:33 GMT

செட்டி ஏரி

அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது செட்டி ஏரி. 10 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியில் தேங்கும் நீரை தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது கொள்ளிடம் குடிநீர் திட்டம் செயல்பட்டு வருவதால் இந்த ஏரியில் தேங்கும் நீரை மக்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்த ஏரியில் தேங்கும் மழைநீரால் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியை சுற்றியுள்ள பகுதியில் பஸ் நிலையம், வாரச்சந்தை, போலீஸ் குடியிருப்பு, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. ஏரிக்கரையில் நடைப்பயிற்சி செய்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் காலை, மாலை இருவேளையும் வந்து செல்கின்றனர். இந்த ஏரிக்கு நீர்வரும் வாய்க்கால் வாலாஜா நகரம் கிராம ஊராட்சியில் உள்ளது.

தொற்றுநோய் பரவும் சூழல்

வாய்க்கால் அருகே உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்கால் வழியாக செட்டிஏரிக்குள் வருகிறது. அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. செட்டிஏரி நிரம்பினால் தண்ணீர் வேறு பாதையில் செல்வதற்கு ஒரு கதவணை உள்ளது. அதனை திறந்து விட்டால் ஏரிக்குள் கழிவுநீர் வராமல் சென்று விடும். ஆனால் நகராட்சி நிர்வாகம் உபரிநீர் செல்லும் பாதையை அடைத்து விட்டு ஏரிக்கு நீர்வரும் கதவணையை திறந்து வைத்துள்ளதால் செட்டிஏரியின் உள்ளே பச்சை வண்ணத்தில் கழிவுநீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதினால் ஏரியின் கரையில் நடைப்பயிற்சி செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க கழிவுநீர் ஏரிக்கு வராமல் சிறிய தடுப்பணை கட்ட வேண்டும். இதேநிலை நீடித்தால் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்