பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள்- அதிகாரி இடையே வாக்குவாதம்

குளித்தலை அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கும், அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

Update: 2023-10-03 18:14 GMT

பயிற்சி வகுப்பு

குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 2-ம் பருவத்திற்கான வட்டார அளவிலான ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 3 வகுப்பறைகளில் இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது, பயிற்சி அறையில் அமர பெஞ்சுக்கு பதிலாக நாற்காலிகள் வழங்குமாறு ஆசிரியர்கள் சிலர் அங்கிருந்த வட்டார கல்வி அலுவலர் ரமணியிடம் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சில ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்காமல் வெளியே சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன், அந்த ஆசிரியர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்தால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சிவராமன் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

இதுகுறித்து உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமனிடம் கேட்டபோது, ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சிலர் சென்னையில் நடைபெற்று வரும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி தாங்கள் அந்த போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக வெளிக்காட்டும் வகையில் நான் கூறாத வார்த்தைகளை வேண்டுமென்றே நான் கூறியதாக கூறி பிரச்சினை செய்தனர் என்றார்.

இதையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் இது குறித்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் பிற்பகலுக்குப்பின் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்