பருவ மழையின்போது பாதிக்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே கண்டறிய வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையின்போது பாதிக்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே கண்டறிய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.;
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையின்போது பாதிக்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே கண்டறிய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயற்கை இடர்பாடுகள் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பருவமழையின் போது பாதிக்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே கண்டறிந்து அங்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மழையின்போது பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிறதா?, அங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்பதை அலுவலர்கள் இப்போதே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
உணவு பொருட்கள் இருப்பு
மழையின்போது பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க தேவையான உணவு பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நிலவும் இக்கால கட்டத்தில் அதற்கேற்ப அரசு கூறுகின்ற அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மழைநீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் சாயும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் எந்திரங்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சியினை அளிக்க வேண்டும். மருத்துவ துறையினர் அனைத்து மருந்துகளையும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். எவ்வித பேரிடர் நிலைமையையும் எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அலுவலர்கள்
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், வருவாய் அலுவலர் சிதம்பரம், முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜசோழன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, தனி தாசில்தார் (பேரிடர்) அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.