போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளதா? பெற்றோர், மாணவிகள் கருத்து

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு உள்ளதா? என பெற்றோர், மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-11-11 18:45 GMT

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.

குழந்தையின் சாட்சியம்

ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இச்சட்டம் பாயும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

இந்த சட்டத்தில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். இதில் குற்றம் புரிபவர்களுக்கு சாதாரண சிறை தண்டனையில் இருந்து கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

ஆனால் நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பிறகு, பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பாலியல் சீண்டல்கள்

இருப்பினும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசுவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இன்னமும் தயக்கம் உள்ளது. மேலும் குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீசாரும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் இணைந்து போக்சோ சட்டம் குறித்தும், எவை பாலியல் சீண்டல், எது நல்ல தொடுதல் (குட் டச்), தீய தொடுதல் (பேட் டச்) என்பது குறித்து மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு

இதன் பலனாக தமிழகத்திலேயே வேறெந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், போலீசார் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள், சமூக நலத்துறையினர் தினசரி ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வே ஆகும்.

இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் மாணவிகள், அது தொடர்பாக தங்களின் பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தெரிவிக்கின்றனர். இதன் மூலம் குற்றம் புரிபவர்களை, போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், மாணவிகள், பெற்றோர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

அச்சமில்லா மாணவிகள்

ஆசிரியை ஈஸ்வரி:- மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் பகுதியில் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்சோ சட்டம் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு தனியாக வெளியே வர அச்சப்பட்ட மாணவிகள், தற்போது தனியாக சாலையில் அச்சமின்றி நடந்து செல்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் மீதும், பள்ளி, கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீதும் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதால், தற்போது மாணவிகளை கண்டாலே கேலி செய்ய அச்சப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், மாணவிகளிடம் போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வே ஆகும்.

கடும் தண்டனை

திட்டக்குடி மாணவி கயல்விழி:- நான் முன்பு பள்ளிக்கு தனியாக செல்லவே அச்சப்பட்டு வந்தேன். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு வந்து ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது நான் துணிச்சலுடன் இருக்கிறேன். மேலும் பள்ளியில் நடக்கும் சம்பவம் குறித்து எப்போதும் எனது பெற்றோரிடம் கலந்துரையாடுகிறேன். அவர்களும் எனக்கு தைரியம் அளிக்கின்றனர். மேலும் மாணவிகளுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் கடும் தண்டனை அளிக்கப்படுவதால், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளை பின்தொடரவே சமூக விரோதிகள் அச்சப்படுகின்றனர்.

தயங்காமல் புகார்

ஜெனோவியா:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறுமிகள் அனைவரும் தற்போது தைரியமாக இருக்கிறார்கள். முன்பு பாலியல் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் நேர்ந்தால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. மேலும் பாலியல் சீண்டல் குறித்து வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பமாட்டர்கள் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை. இதனால் பலர் தங்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நேர்ந்தால் உடனடியாக பெற்றோரிடமோ அல்லது போலீசிலோ தயங்காமல் புகார் அளிக்கின்றனர்.

முற்றுப்புள்ளி

சந்திரா:- கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பண்ருட்டியில் தான் அதிகளவில் சிறுமிகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கடலூர், விருத்தாசலத்தில் தான் ஏராளமான சிறுமிகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர், சைல்டு லைன் அமைப்பினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகள் குறித்து தயங்காமல் புகார் அளிக்கின்றனர். இல்லையெனில் சிறுமிகள் பாதிக்கப்படுவது குறித்து வெளி உலகுக்கு தெரியாமலே போய்விடும். மேலும் குற்றவாளிகள் தாங்கள் என்ன செய்தாலும் தப்பி விடலாம் என்ற எண்ணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையே வீண்

கடலூர் மாணவன்:- 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால், அவர்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும். அதனால் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறான நோக்கத்துடன் தொட்டால் நமது வாழ்க்கையே வீணாகி விடும் என இப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சிறுவா்களுக்கும் சட்டம் பொருந்தும்

வக்கீல் அஜிதா:- போக்சோ சட்டம் என்பது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். போக்சோ சட்டம் குறித்து கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் நீதிபதிகள், போலீசார், வக்கீல்கள் மற்றும் சமூக நலத்துறையினர் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட சட்ட உதவி மையம் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் இன்றைய காலத்தில் சிறுமிகள் அனைவரும் துணிச்சலுடன் தனியாக செல்கின்றனர். சிறுமிகள் அளிக்கும் புகார்களுக்கு போலீசாரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கின்றனர்.

மேலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, புகார் அளிக்கும் சிறுமிகளின் பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படாது. அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இதனால் தற்போதுள்ள சிறுமிகள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் சிறுமிகள், அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமிகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக இழப்பீடும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்