தியேட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா? என உதவி கலெக்டர் யுரேகா ஆய்வு செய்தார்.;

Update: 2023-10-19 18:45 GMT

3 தியேட்டர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் நேற்று வெளியானது. மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறையில் 2 தியேட்டர்களிலும், சீர்காழியில் ஒரு தியேட்டரிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு காட்சி இல்லாமல் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆராவாரத்துடன் படம் பார்க்க சென்றனர்.

இந்த நிலையில் அதிக கட்டணம் வசூல் செய்தல் போன்ற விதிமீறல்கள் இருப்பின், பொதுமக்கள் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோரின் தொலைபேசி எண்களுக்கு புகார் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று காலை முதல்காட்சி படம் முடிவடைந்து 2-வது காட்சி தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் உதவி கலெக்டர் யுரேகா மயிலாடுதுறையில் உள்ள ஒரு தியேட்டரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை

தொடர்ந்து டிக்கெட் எடுத்துக்கொண்டு படம் பார்க்க வந்தவர்களிடம் டிக்கெட் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினீர்கள் என்று நேரடியாக உதவி கலெக்டர் யுரேகா கேட்டறிந்தார். அப்போது பால்கனி டிக்கெட் ரூ.250-க்கும், தரைதளத்தில் ரூ.200-க்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின் தியேட்டர் உள்ளே சென்று சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காட்சி முடிந்தவுடன் தியேட்டரை சுத்தம் செய்து அடுத்த காட்சியை திரையிட வேண்டும் என்று உதவி கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது தாசில்தார் சபிதா தேவி மற்றும் வருவாய் துறைஅலுவலர்கள் உடன் இருந்தனர். லியோ திரைப்படம் ஓடும் தியேட்டரில் வருவாய்துறை சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்