டாஸ்மாக் பார்களில் போலி மது விற்கப்படுகிறதா?

Update: 2023-05-22 19:36 GMT

தஞ்சாவூரில் மது குடித்த 2 பேர் இறந்த சம்பவம் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

கலெக்டர் உத்தரவு

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே அருகில் உள்ள பாரில் அவர்கள் மது வாங்கி அருந்தியது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் ஏதும் இயங்குகிறதா? என்றும், போலி மதுபானம் விற்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் பாரில் ஆய்வு

அதன்பேரில், மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கலால் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் நேற்று சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், அதன் அருகில் செயல்பட்டு வரும் பார்களிலும் அதிரடியாக ஆய்வு செய்தனர். கொண்டலாம்பட்டி, நெத்திமேடு, டவுன், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, டாஸ்மாக் பாரில் மது விற்பனை செய்யக்கூடாது என்றும், அதை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு சம்பந்தப்பட்ட பார் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். மேலும், போலி மதுபானங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

தொடர்ந்து மேட்டூர், கொளத்தூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? உரிமம் பெற்று பார்கள் செயல்பட்டு வருகிறதா? என்றும் கண்காணித்தனர்.

அதேசமயம், அனுமதிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் அதிகாலையில் டாஸ்மாக் பார்களை திறந்து மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சந்து கடைகளில் விற்பனை

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகளும், 49 பார்களும் செயல்பட்டு வருகின்றன. உரிமம் இல்லாமல் பார்கள் செயல்படுகிறதா? எனவும், போலி மதுபானங்கள் விற்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்து வருகிறோம்.

அதேபோல், சந்து கடைகளில் மது விற்பனை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

மேலும் செய்திகள்