நாமக்கல்லில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?

நாமக்கல்லில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-04-23 18:45 GMT

தெருநாய் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சினையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய பிரச்சினையாகவே உருமாறி இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அபரிமிதமான இனப்பெருக்கம்

தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதத்திலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் போடும். இதனால் தெருநாய்கள் இனப்பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.

ஆரம்ப காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. காலப்போக்கில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் தெருநாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் நகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்கள் பிடிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு அச்சுறுத்தல்

தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை, 'தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.

அதன்படி நகராட்சி பூங்காக்கள், சாலையோர பகுதிகள் போன்ற இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான விலை உயர்ந்த நாய்களையும் நடைபயிற்சியின்போது உடன் அழைத்து வருகிறார்கள். அப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்கு வருவோருக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்களால் அச்சுறுத்தல் என்று ஒருபுறம் பொதுமக்களும், தெருநாய்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் இன்னொரு புறமும் நகராட்சிக்கு புகார் அளிக்கச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் நாமக்கல்லில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து அன்றாடம் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாமக்கல்லை சேர்ந்த ரவி:-

நாமக்கல் நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நடைபயிற்சி செல்வோரை மட்டும் இன்றி சாலையில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகள், பெண்களையும் தெருநாய்கள் துரத்தி கடித்து வருகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் ரெயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது. ஏனெனில் சேந்தமங்கலம் சாலையில் குழுமி இருக்கும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. நாய்க்கு பயந்து இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கியவர்கள் அநேகம் பேர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தெருநாய்கள் தொல்லை என்று புகார் அளித்தால் மட்டுமே நாய் பிடிக்கும் வாகனங்கள் வரக் கூடாது. தினமும் ஒவ்வொரு தெருக்களை சுற்றி வந்து, முகாமிட்டுள்ள நாய்களை ஒட்டுமொத்தமாக பிடித்து செல்ல வேண்டும்.

ஓட்ட பயிற்சியாக மாறுகிறது

எருமப்பட்டி அருகே உள்ள வரகூரை சேர்ந்த சபா ரத்தினம்:-

நான் டாபர்மேன் நாய் வளர்த்து வருகிறேன். அந்த நாயை அழைத்துக் கொண்டு 'வாக்கிங்' சென்றால் தெருநாய்கள் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. வளர்ப்பு நாய்களை கடிப்பது போல் வருவதால் அவை பீதி அடைகின்றன. மேலும் தெருவில் சுற்றித்திரியும் சில நாய்களால் குழந்தைகள், முதியோர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை உள்ளது.

எனவே தெருநாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகளவில் கருத்தடை மேற்கொள்ள வேண்டும். தெருநாய்கள் தொல்லையால் பல நாட்கள் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சியாக மாறிவிடுகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்களை தெருநாய்கள் சில நேரங்களில் துரத்தி கடித்து காயப்படுத்துகின்றன. அவர்கள் தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவிற்கு ஓட வேண்டி உள்ளது.

நடைபயிற்சிக்கு இடையூறு

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த குமார்:-

தற்போதைய உணவு பழக்க வழக்கம் காரணமாக 40 வயதை தாண்டினாலே உடலில் பல்வேறு பிரச்சினைகள் தென்படுகின்றன. எனவே பலர் 40 வயது தாண்டினாலோ மருத்துவரின் ஆலோசனைபடி நடைபயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

ஆனால் இதற்கு தெருநாய்கள் இடையூறாக அமைகின்றன. தற்போது வெயில் கொடுமை அதிகம் இருப்பதால் சில நாய்களின் செயல்பாடுகள் வெறி பிடித்தது போன்று உள்ளது. எனவே நடைபயிற்சியில் ஈடுபடுவதற்கே அச்சமாக உள்ளது. தெருநாய்கள் நம்மை பின் தொடர்கிறதா? என்று அவ்வப்போது திரும்பிப் பார்த்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்கள் நிம்மதியாக, இடையூறு இல்லாமல் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்றால் தெருக்களில் சுற்றி செல்லும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும். தெருநாய்களை கருத்தடை செய்து மீண்டும் அதே இடங்களில் விடக் கூடாது. தெருநாய்களுக்கு என்று காப்பகத்தை உருவாக்கி அங்கு வளர்க்க வேண்டும்.

தெருவுக்கு பாதுகாவலன்

திருச்செங்கோட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் வடிவேல்:-

என்னைப் பொறுத்தவரையில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் வீட்டுக்கு பாதுகாவலனாக இருப்பது போன்று தெருநாய்கள் தெருவுக்கு பாதுகாவலனாக திகழ்கின்றன. ஒரு தெருவில் நாய்கள் கூட்டமாக இருப்பது திருட்டு, கொள்ளை போன்றவற்றில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஆரம்ப காலத்தில் நடைபயிற்சி செல்லும் போது பயங்கர சப்தத்துடன் கூட்டமாக குரைத்தபடி தெருநாய்கள் பின் தொடரும். அப்போது கடித்துவிடுமோ? என்ற அச்சம் மேலோங்கி இருந்தது. பின்னர் அந்த நாய்களுக்கு 'பிஸ்கெட்' கொடுத்து பழகினேன். இதன் மூலம் ஆரம்பத்தில் என்னை பார்த்து குரைத்த நாய்கள் தற்போது வாலாட்டி வருகின்றன. கற்களை கொண்டு சீண்டுவோர்களுக்கு தான் தெருநாய்கள் எதிரி. பிஸ்கெட் கொடுப்பவர்களை அவை ஒருக்காலும் குரைப்பது இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

242 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சுகாதாரபிரிவு அலுவலர்கள் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நாமக்கல் நகராட்சியில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் மட்டும் 242 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து உள்ளோம். 2023-24-ம் நிதியாண்டில் எத்தனை நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது என நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணியை தொடங்குவோம். கடந்த காலங்களில் நாய்களை சுருக்குவலை மூலம் பிடிப்போம். ஆனால் தற்போது சுருக்குவலை மூலம் நாய்களை பிடிக்க தடை விதித்து விட்டனர். எனவே மீன்பிடிக்கும் வலைகளை பயன்படுத்தியே நாய்களை பிடிக்க வேண்டி உள்ளது. இதற்கு காலதாமதம் ஏற்படும்.

இதேபோல் கடந்த ஆண்டு முதல் அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கும் லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நாய்களை பிடிக்கும் போது கண்காணிப்பு குழு முன்னிலையில் தான் பிடிக்க வேண்டும். பிடித்த அன்றே அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. 2-வது நாளில் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 நாட்கள் கண்காணித்து அதே இடத்தில் கொண்டு போய் விட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாதம் ஒன்றுக்கு சுமார் 600 பேர் வரையிலும், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மாதம் ஒன்றுக்கு 1,200 பேர் முதல் 1,500 பேரை வரையிலும் தெருநாய்கடிக்கு ஊசி போட்டு கொள்வதாகவும், இதுதவிர கிராமபுறங்களில் உள்ளோர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தெருநாய் கடிக்கு ஊசி போட்டு கொள்வதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்