தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுமா?

தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுமா? என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Update: 2022-10-12 18:49 GMT

தாய்ப்பால்

ஒரு தாய் தனது குழந்தைக்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். இதனால் கைக்குழந்தைகளோடு பயணம் செய்யும் தாய்மார்கள், குழந்தைக்கு தேவையான நேரத்தில் தாய்ப்பாலை வழங்குவார்கள். இவ்வாறு பொது இடங்களில் வைத்து தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சற்று சிரமம் அடைந்தனர். இதேபோல பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பஸ் நிலையங்களில் தாய்மார்களின் நிலை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்கள் மறைவாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள்.

பாலூட்டும் அறை

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றானது தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகும். அதாவது பஸ் நிலையங்களில் தாய்மார்கள் ஒரு அறையில் இருந்து எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இத்திட்டத்தை தொடங்கினார். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

இதற்காக பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை என தனியாக ஒதுக்கப்பட்டது. அந்த அறைகளில் பெண்கள் அமர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இருக்கைகள் போடப்பட்டன. மேலும் மின் விளக்குகள், மின் விசிறிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டன.

இருக்கை வசதிகள்

புதுக்கோட்டையை பொறுத்தவரை புதிய பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை என மதுரை பஸ்கள் நிறுத்துமிடத்தில் உள்ளது. இந்த அறையை தினமும் சராசரியாக 10 பெண்கள் வரை தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வந்து செல்வதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தாய்மார்கள் பாலூட்டும் அறையின் உள்ளே பெண்கள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

அறையின் ஓரத்தில் பழைய பதாகை பலகைகள் போட்டு கிடந்தன. கைகள் கழுவும் தண்ணீர் குழாய் மட்டும் பராமரிப்புமில்லாமல் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்பதே அங்கு வந்தவர்களின் கோரிக்கையாகும். அறையின் முகப்பு பகுதியின் அருகே சற்று சுத்தம் செய்து பராமரித்தால் மேலும் நன்றாக இருக்கும். மற்றப்படி தாய்மார்கள் பாலூட்டும் அறை தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பயனுள்ளதாக உள்ளது

இந்த அறை குறித்து பொதுமக்கள் தரப்பில் வீரம்மா என்பவர் கூறுகையில், ''புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. பஸ் நிலையத்திற்கு கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் இந்த அறையை பயன்படுத்துகின்றனர். பகல் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் இந்த அறை திறந்திருக்கும். அப்போதும் பெண்கள் வருவது உண்டு. பொது இடத்தில் வைத்து பெற்ற குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டும் போது சேலை முந்தானையால் மறைத்துக்கொண்டு சற்று மறைவை நோக்கி செல்வது உண்டு. ஆனால் இந்த அறையானது தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்ட வசதியாக உள்ளது. ஆண்கள் யாரும் இந்த அறைக்குள் செல்வதில்லை. நல்ல முறையில் இந்த அறை உள்ளது'' என்றார்.

இதேேபால் அறந்தாங்கி, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் இயங்கி வருகிறது. இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டி கிடக்கும் அறையை திறக்க வேண்டும்

விராலிமலை சந்தைப்பேட்டை அருகே புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கு 11 கடைகள் ஊராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு அறையை பாலூட்டும் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு அதனை கைக்குழந்தையுடன் விராலிமலைக்கு வந்து செல்லும் தாய்மார்கள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி வந்தனர். புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு இதுவரை செயல்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி ஜீவிதா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பஸ் நிலையத்திற்குள் ஆரம்ப காலத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது செயல்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது. அதற்கு காரணம் தற்போது வரை ஒரு சில பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதால் பஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் அந்த அறையை பயன்படுத்துவதற்கு அச்சப்பட்டு அங்கு செல்லாமல் இருந்ததாலேயே நாளடைவில் அந்த அறையை பூட்டிய நிலையில் வைத்துள்ளனர். இதேபோல் பஸ் நிலையத்தில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட கழிவறையும் செயல்படாமல் இருப்பது வேதனையளிக்கும் விதமாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்