தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா வடமாநில தொழிலாளர்கள்? - வடமாநிலத்தவர்கள் பரபரப்பு பேட்டி

சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

Update: 2023-03-04 05:21 GMT

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

இவ்விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இவ்விவகாரம் எதிரொலித்தது. தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தனி குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் தங்களின் பாதுகாப்பு குறித்தும் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களிடம் தந்தி டிவி செய்தியாளர் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு இங்கே நல்ல பாதுகாப்பு உள்ளது. தமிழர்களுக்கு கொடுக்கும் சம்பளமே எங்களுக்கும் கொடுக்கிறார்கள். இங்கே எங்களுக்கு எந்த பிர்ச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் அனைவரும் எங்களிடம் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர்.

ஆனால், கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் நாங்கள் தாக்கப்படுவதாக எங்களது போன்களுக்கு வீடியோ வருகிறது. இது ஒருசிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வருகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காகவே நாங்கள் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். ஆனால் ஒருசிலர் தவறான வீடியோக்களை பார்த்துவிட்டு அச்சத்தில் வெளியேறியுள்ளனர். தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்