பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா?- கண்காணிக்க கலெக்டர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-13 20:00 GMT

கல்வி ஆலோசனைக்கூட்டம்

மதுரை மாவட்ட அளவிலான பள்ளி செல்லாத குழந்தைகளுக்கான 3 அடுக்கு குழு, எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி குழு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணத்துக்கான அனைத்துக்கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலெக்டர் சங்கீதா பேசியதாவது:-

மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லாத இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் ஆகியோரை தொடர்ந்து கண்காணித்து பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளி செல்லாமல் இடையில் நிற்கும் மாணவர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக மாதந்தோறும் 4-வது வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வட்டார அளவில் கூட்டம் நடத்த வேண்டும்.

சோதனை

பிற துறை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள பள்ளி செல்லாத குழந்தைகளை பார்வையிட்டு அதன் விவரங்களை மாவட்ட அளவிலான 3 அடுக்கு குழு கூட்டத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டு பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களை சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழு அமைத்து அந்த குழந்தைகளின் உடல்நலத்தை பரிசோதிக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் போதை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் குறித்து போலீசார் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் நலத்துறையினருடன் பிற துறை அலுவலர்கள் இணைந்து 20 குழுக்கள் அமைத்து மாநகர பகுதிகளில் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும்.

அரிட்டாபட்டி மலைக்கு

பெண்கள் பள்ளிகளுக்கு பெண் டாக்டர்கள் சென்று ஆலோசனைகள் வழங்க வேண்டும். தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாதுகாப்பு மையமான அரிட்டாபட்டி மலைப்பகுதிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்து செல்ல வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிக்கும் 3734 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த பயம் மற்றும் குழப்பங்களை போக்கி, உயர்கல்வி படிப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று விளக்கமளிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்து செல்ல வேண்டும். இதற்காக அரசு பஸ்கள் மற்றும் தனியார் கல்லூரி பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் அரசுத்துறையின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்