பென்னாகரம்:-
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பூதிநத்தம் கிராமத்தில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அகழாய்வில் 36 சென்டி மீட்டர் ஆழத்தில் சி9 என்னும் அகழாய்வு குழியில் 22 சென்டிமீட்டர் நீளமுள்ள கற்கால கருவி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது. போலாராய்டு என்ற கல் வகையை சார்ந்த இந்த கருவியின் ஒரு பகுதி 7.74 சென்டிமீட்டர் அகலமும், 4.7 சென்டிமீட்டர் தடிமனுடன் உள்ளது. மற்றொரு பகுதி 1.7 சென்டி மீட்டர் அகலமும், 3.2 சென்டிமீட்டர் தடிமனுடனும் உள்ளது. இது நிலத்தை உழும் கலப்பையின் கொழுவாகவோ, வெட்டுவதற்கான கோடாரியாகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி பூதிநத்தம் அகழாய்வில் கிடைத்துள்ளது வரலாற்று ஆய்வாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.