ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-31 18:21 GMT

ஆரணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆரணி, போளூர், செங்கம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆரணி பெரிய கடை வீதியில் உள்ள நகை வியாபாரிகள், பொன், வெள்ளி நகை வியாபாரிகள் இணைந்து 30-வது ஆண்டாக சுமார் 15 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைத்து பலூன் கட்டியும், கலசம் நிறுத்தியும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினர். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.

பெரிய கடை வீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன, மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மாட வீதியின் வழியாக சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. லிங்கப்பன் தெரு மஹா செல்வ கணபதி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீதி விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், நீதி துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், அரசு வக்கீல் ராஜமூர்த்தி, வக்கீல் சங்க தலைவர் ஸ்ரீதர் உள்பட வக்கீல்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருணகிரி சத்திரம் நாராயணன் தெருவில் அமைந்துள்ள மங்கள விநாயகர் கோவிலில் நடந்த பூஜையில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நகர மன்ற துணைத் தலைவர் பாரி பி.பாபு உள்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்து முன்னணி அமைப்பின் சார்பாக நகரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

போளூர்

போளூர் நகரில் தாலுகா அலுவலகம் அருகில், அல்லிநகர், பஸ் நிலையம் அருகில், மார்க்கெட் அருகில் என 25 இடங்களில் அலங்கரிக்கப்பட்ட பந்தல் களில் விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.

சோமநாத ஈஸ்வரர், கைலாசநாதர், கன்னிகா பரமேஸ்வரி, தாய் முகாம்பிகை, போலாட்சி அம்மன், வெண்மனி வரசித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

இதேபோல் போளூரை சுற்றி உள்ள கிராமங்களில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.

இதனையொட்டி இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கம்

செங்கம் நகரில் 23 இடங்களில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அனைத்து விநாயகர் சிலைகளும் மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ஊர்வலத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் டிரோன் கேமரா மூலம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்பு அப்பகுதி மக்கள் சார்பில் நந்தி விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காட்டுக்காநல்லூர் சுந்தர விநாயகர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கணேசபுரம் கைலாச விநாயகர் கோவிலிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு காசி விஸ்வநாதர் கோவில், காரணீஸ்வரர்கோவில் நெடுங்குணம் தீர்க்காச்சல ஈஸ்வரர், பெரணமல்லூர் சுயம்பு கரைஸ்வரர், இஞ்சிமேடு பெரிய மலை திரு மணிச்சேறைவுடையர், தேசூர்சிவசுப்பிரமணியர் கோவில் தூண்டுகை விநாயகர் சன்னதி, காசி விசுவநாதர் கோவில், வரசக்தி விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் விநாயகர் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு அருகம்புல், எருக்கம்பூ மாலை, கம்பு செடி, வேர்கடலை, கரும்பு.இனிப்பு ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டு பகுதியில் கிராமங்கள் 43 இடங்களிலும், பெரணமல்லூர் பகுதியில் 28 இடங்களிலும், தேசூர் பகுதியில் 32 இடங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் காந்தி தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், இந்திரா நகரில் உள்ள முத்து விநாயகர் கோவில், பட்டித்தெரு வலம்புரிசக்தி விநாயகர் கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் முன்பாக அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்து நடந்த பூஜையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பல இடங்களில் 10 அடி உயர அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்