சேலத்தில் கலந்தாய்வு கூட்டம்: நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி

நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.;

Update:2022-11-04 01:52 IST

சேலம்,

கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் சேலம் மற்றும் கோவை மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவரும், நடிகருமான வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 50 கலைஞர்களுக்கு ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதிக நிதி ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து வாகை சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டுப்புற கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புறக்கலைஞர்களின் தேவைகளை அறியும் வகையில் மண்டல வாரியாக ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதி, ஆடை ஆபரணங்கள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதனை மண்டல வாரியாக கலைஞர்களுக்கு வழங்கி வருகிறோம்.

உறுப்பினர்கள் பதிவு

ஒரு நாட்டின் வளர்ச்சியை கலையின் முன்னேற்றத்தை கொண்டே கேட்டறிந்து கொள்ள முடியும். இதனால் கலையை வளர்த்திட நலவாரியம் அமைக்கப்பட்டு கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு நல உதவிகள் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். ஆனால் 48 ஆயிரம் பேர் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்க பதிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புற, நாடக கலையை பயிற்றுவிக்க தனி வகுப்பு நடத்த வேண்டும் என்பதை முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க உள்ளோம். மாணவர்களிடம் கலையை வளர்த்தால் தான் கிராமிய கலைகள் தொடர்ந்து வளர்ந்து வரும்.

உரிய நடவடிக்கை

மேலும், கூட்டத்தில் இசை நாடக கலைஞர்கள், தெருக்கூத்து, தவில், பம்பை, நாதஸ்வரம், கரகாட்டம், மயிலாட்டம், சாக்ஸாபோன் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்கள் தங்களது பல்வேறு கோரிக்கையை மனுக்களை அளித்துள்ளார்கள். அதில் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள், மறைந்த கலைஞர்களுக்கான குடும்ப பராமரிப்புக்கான ஓய்வூதிய தொகை, நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசுத்துறைகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற உறுப்பினர் விஜயா தாயன்பன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்பட நாட்டுப்புறக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்