1,132 பேருக்கு பணி நியமன ஆணை

ஓசூரில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,132 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.;

Update: 2023-03-31 18:45 GMT

மத்திகிரி-

ஓசூரில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,132 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

வேலை வாய்ப்பு முகாம்

ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள், பல்வேறு தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1.132 பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தொடர்ந்து திறன் வளர்ப்பு பயிற்சி பெற்ற 100 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், 7 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை, கோவை மற்றும் மதுரைக்கு நிகராக வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. தொழில்சாலைகள், போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள் என உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல மாங்காய், காய்கறிகள், பூ வகைகள், தேங்காய் என விவசாயம் சார்ந்த பொருட்களும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் 2000-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

பணி நியமன ஆணை

அந்த நிறுவனங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகிறது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 148 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த முகாமில் 2,963 பேர் பதிவு செய்தனர். இவற்றில் 1,132 பேர் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர். பணி ஆணை பெற்றவர்கள் நல்லமுறையில் பணியாற்றி எதிர்காலத்தில் தங்கள் தொழில் திறனை வளர்த்து கொண்டு நல்ல பணியாளர்களாக விளங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி மேயர் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் ஜாகிர் உசேன், தொழில் பாதுகாப்பு இணை இயக்குனர் சபீனா, தொழில் பாதுகாப்பு இணை இயக்குனர் இளவரசி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்திரன், தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்