வாகன நுழைவு வரி வசூலிக்க மகளிர் குழுவினர் நியமனம்
தமிழக-கேரள எல்லையில் வாகன நுழைவு வரி வசூலிக்கும் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.;
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில் வாகன நுழைவு வரி வசூலிக்கும் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாகன நுழைவு வரி
கேரள-கர்நாடகா மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி உள்ளது. இதனால் நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, தாளூர், கக்கநல்லா உள்பட 7 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து முக்கிய சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன நுழைவு வரி வசூலிக்கும் பணியில் கடந்த காலங்களில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பணிச்சுமை காரணமாக வரி வசூலிக்கும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்தநிலையில் வரி வசூலிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
மகளிர் குழுவினர்
இந்தநிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி சோதனைச்சாவடியில் வெளிமாநில வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் நாடுகாணி பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியாறு பகுதியில் வாகன நுழைவு வரி வசூல் செய்யும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து இனிவரும் காலங்களில் மீதமுள்ள சோதனைச்சாவடிகளில் வரி வசூலிப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.