கூடலூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் நியமனம்

கூடலூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டார்.

Update: 2022-12-23 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் நகராட்சி அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் சான்றிதழ் உள்பட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அலுவலகத்தில் மேலாளர், சுகாதார ஆய்வாளர் உள்பட முக்கிய பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்ததால் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் தினமும் ஏராளமான மக்கள் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வந்தனர். தொடர்ந்து சான்றிதழ் பெற முடியாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் என்பவர் கூடுதல் பொறுப்பாக கூடலூர் நகராட்சிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று சுகாதார ஆய்வாளராக செல்வராஜ் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்து உள்ள பொதுமக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர். பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்