விண்ணப்பங்கள்- டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம்
விண்ணப்பங்கள்- டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம்;
ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள்-டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
பயிற்சி கூட்டம்
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. பின்னர் கலெக்டர் பேசுகையில், ரேஷன்கடை விற்பனையாளர்கள் தங்களது கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தேவையான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ரேஷன்கடை விற்பனையாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களின் வீடுகளுக்குச்சென்று குடும்ப அட்டை எண்ணைக் குறித்து வழங்க வேண்டும்.
ஒப்புகை கையொப்பம் பெற வேண்டும்
ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடாது. விண்ணப்பம் வழங்கிய பின்னர் அந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒப்புகை கையொப்பம் பெறவேண்டும். விண்ணப்பம் பதிவு முகாமானது வருகிற 24-ந்தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 1 மணிவரை, பிற்பகல் 2 மணிமுதல் 5.30 மணி வரை நடத்தப்படும்.
ஒவ்வொரு முகாமிற்கும் 60 அல்லது 80 பேர் இரு பகுதி நேரங்களில் வருவார்கள். முகாம் நடைபெறும் இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்திட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் விண்ணப்பப் பதிவு சீட்டுகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேரங்களை குறித்து தரவேண்டும். குடும்ப அட்டை தாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் வர இயலாத குடும்ப அட்டை தாரர்களுக்காக முகாம் நாளின் கடைசி இரண்டு நாளில் வரவேண்டும்.
ஆதார் பதிவேற்றம்
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் எந்தெந்த நாட்களில், எந்தெந்த தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்படும் என்ற விவரத்தை ஒரு தகவல் பலகையாக ரேஷன் கடையில் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். பொது வினியோகத்திட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டை தாரர்கள் கலைஞர் மற்றும் மகளிர் உரிமைத்திட்டத்தில் விண்ணப்பம் செய்யவிருப்பப்பட்டால், விண்ணப்பங்களை ரேஷன் கடைகளில் நேரடியாக வந்து பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், நீங்கள் குடும்பத்திலுள்ள யாரிடம் வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆனால் முகாம் நாளன்று இந்த திட்டத்திற்கு பதியப்படவுள்ள பெண் குடும்பத்தாரர் கண்டிப்பாக வரவேண்டும்.
ஒ.டி.பி. மூலம் பதிவு
பெண் குடும்பத்தாரருக்கு கை ரேகை பதியப்பட உள்ளது. கை ரேகை பதியப்படாத, முடியாத முதியோர்கள் இருப்பின் அவர்கள், அவர்களது முகாம் நாளன்று ஆதார் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைபேசி எண்ணினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் ஒ.டி.பி. மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றார். இதில் கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.