தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்;
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டப்பகுதியான முருகமங்கலத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி தொடங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் சென்னையின் பதிவு பெற்ற நிறுவனமாகவும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை பயிற்சியளிக்கும் தொண்டு நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஜி.எஸ்.டி. சாலை, மாவட்ட நீதிமன்றம் அருகில், செங்கல்பட்டு-6003001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும், உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி இந்த மாதம் 31-ந்தேதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.