மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது

மாவட்டத்தில் 851 மையங்களில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ், மேயர் சுந்தரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்;

Update: 2023-07-24 18:45 GMT

கடலூர்

மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் எனவும், இத்திட்டம் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1000 பெற தகுதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.

அதன்படி இத்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,416 ரேஷன் கடைகளிலும் 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. இந்த முதல் கட்ட முகாமிற்காக மாவட்டம் முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வீடு, வீடாக டோக்கன் மற்றும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. அந்த டோக்கனில் எந்த நாள், எந்த நேரம் விண்ணப்பத்தை பதிவு செய்ய வர வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

விண்ணப்ப பதிவு

இதையடுத்து முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று காலை 10.15 மணி அளவில் தொடங்கியது. இதற்காக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக நாற்காலிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து முகாமிற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை வாங்கி சரிபார்த்து, பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கைரேகை பதிவு செய்யும் போது சா்வா் பிரச்சினை ஏற்பட்டதால், விண்ணப்பங்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடலூர் வன்னியர்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த விண்ணப்ப பதிவு முகாமை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒருவர் கூட விடுபடாத வகையில் அனைவருக்கும் சரியான முறையில் விண்ணப்பங்களை சரி பார்த்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

851 மையங்கள்

பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) முதல் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தொடங்கி நடக்கிறது. இந்த முகாம் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் 851 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை விண்ணப்பங்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். அதுபோல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு, இந்த முகாம் முடிந்த பிறகு, கூடுதலாக 2 நாட்கள் ஒதுக்கப்படும். எனவே அந்த நாட்களில் சென்று குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பள்ளியில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்