மானியத்தில் மூலிகை தோட்டம் அமைக்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

மானியத்தில் மூலிகை தோட்டம் அமைக்க இணையத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-27 19:32 GMT

அரியலூர்:

தோட்டக்கலைத்துறை மூலம் 2022-23-ம் நிதியாண்டில் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தில் அரியலூர் மாவட்டத்திற்கு 300 மூலிகை தோட்டங்கள் அமைக்க ரூ.2¼ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மூலிகை தோட்டம் அமைக்க ரூ.1,500 மதிப்பில் துளசி, கருவேப்பிலை, கற்றாழை, கற்பூரவள்ளி, புதினா, வல்லாரை, திப்பிலி, பிரண்டை, லெமன்கிராஸ் மற்றும் இன்சுலின் ஆகிய 10 வகையான மூலிகை செடிகளும், செடிகள் வளர்ப்பதற்கான செடிகள் வளர்ப்பு பைகள் 10, 20 கிலோ தென்னை நார் கட்டிகள், 4 கிலோ மண் புழு உரம் ஆகியவை அடங்கிய தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. நபர் ஒருவருக்கு ரூ.750 பயனாளியின் பங்கு தொகையாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுடையோர் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடனும், ஆவணங்களுடனும் www://tnhorticulture.gov.im/kit.new என்ற இணையதளத்தில் பதிவு செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்