கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடுஅரசியல் கட்சியினர் கூட்டத்தில் முடிவு

குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசியல் கட்சியினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-01 21:08 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல கோர்ட்டு வழங்கிய அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசியல் கட்சியினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கனரக வாகனங்கள்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சாலை விபத்துக்கள் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 304 பேர் பலியானார்கள். எனவே இதை தடுக்கும் வகையில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் இதை எதிர்த்து கனரக வாகன உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த கோர்ட்டு மாவட்ட நிர்வாகத்தின் தடையை நிறுத்தி வைத்தது. மேலும் 8 வாரங்கள் 750 வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து கனிம வளம் கொண்டு செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்த அரசு எடுத்த நடவடிக்கை குறித்த விளக்க கூட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று மாலையில் நடந்தது.

மேல்முறையீடு

கூட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று அரசியல் கட்சியினருக்கு, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து கோர்ட்டு விதித்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசியல் கட்சியினர் முடிவு செய்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில தனிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், மாநகர செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், பினுலால்சிங், கே.டி.உதயம், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மேசியா, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி ஜாகிர்உசேன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ரூபன் ஆன்டோ, ம.தி.மு.க. நிர்வாகி எழில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜனதா- அ.தி.மு.க.

அதே சமயம் கூட்டத்தில் பங்கேற்கும்படி பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்