எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

Update: 2024-09-06 10:32 GMT

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூடநம்பிக்கைகள் குறித்து பேசியவரை, அதே மேடையில் வைத்து கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், "என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்" என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது. நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு.

"எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும்" என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். கல்வியால் உலகை வெல்வோம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். "கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய மிகப்பெரிய ஆயுதம்" - மு.க." என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்