அந்தியோதயா ெரயில் நெல்லையில் நிறுத்தம்
நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரெயில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக நெல்லையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;
நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரெயில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக நெல்லையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இரட்டை ரெயில் பாதை
நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3-50 மணிக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்னை தாம்பரம் செல்கிறது.
மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்கிறது.
முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டி அதிக அளவில் இயக்கப்படுவதால் இந்த ரெயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த ரெயிலில் பணிக்கு செல்கின்ற பயணிகள் ஏராளமானோர் சென்று வருகிறார்கள். இதனால் எப்பொழுதும் இந்த ெரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
நெல்லையில் நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு தாம்பரத்திலிருந்து வழக்கம் போல் இந்த ரெயில் புறப்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு ரெயில் நெல்லை சந்திப்புக்கு வந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது இரட்டை வழி ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் இந்த ரெயில் நெல்லையுடன் நிறுத்தப்படுவதாகவும், நாகர்கோவில் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு டிக்கெட் வழங்கும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகள், தாங்கள் நாகர்கோவில் வரை செல்ல டிக்கெட் எடுத்து இருப்பதாகவும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென ரெயில் நிறுத்தப்பட்டதாக கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களுக்கான டிக்கெட் கட்டண பணம் திருப்பி வழங்கப்பட்டது. இதனால் பயணிகள் அங்கிருந்து சென்றனர்.