ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தொடங்கி வைத்தார்.;

Update: 2023-10-07 21:45 GMT

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

பழங்கால வாகன அணிவகுப்பு

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 'கார் டிரைவ்-2023' என்ற பழங்கால வாகன கண்காட்சி கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றுடன் கர்நாடகா ஹெரிடேஜ் மோட்டார் வாகனங்களும் வந்தன.

இந்தநிலையில் நேற்று ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பு நடந்தது. இதனை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பானது தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் இருந்து தொடங்கி மாரியம்மன் கோவில் வரை சென்று கமர்சியல் சாலை வழியாக மீண்டும் சிம்சன் நிறுவனத்தை வந்தடைந்தது.

இன்று கண்காட்சி

முக்கிய சாலையில் வரிசையாக சென்ற பழங்கால வாகனங்களை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். அவர்கள் கார்களுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் தலைவர் பால்ராஜ் வாசுதேவன், செயலாளர் எம்.எஸ்.குகன், பொருளாளர் விஜி ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பழங்கால வாகனங்கள் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள சிம்சன் நிறுவனத்தில் கண்காட்சிக்காகவும், பொதுமக்கள் பார்வைக்காகவும் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஊட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழங்கால வாகன கண்காட்சி நடக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள கார்களை கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

35 கார்கள்

இந்த அணிவகுப்பில் 35 கார்கள், 10 இருசக்கர வாகனங்கள், படுக்கை வசதிகளுடன் கூடிய பஸ் (கேரவன்) ஆகியவை இடம்பெற்றது. இவை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ், பியட், ஆஸ்டின், மெர்சிடஸ் பென்ஸ், ஜாக்குவார், போர்டு உள்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் கார்கள் இடம் பெற்று உள்ளன.

குறிப்பாக 1932-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'டாட்ஜ் பிரதர்ஸ்' சொகுசு கார், 1934-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஆஸ்டின், 1928-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போர்டு கார், 1936-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சொகுசு கேரவன், 1945-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிட்ரோயன் ஹாட் ராடு கார், 1966-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வோக்ஸ்வேகன் ஆகியவை இடம் பெற்று உள்ளது.

வெகு தூர பயணம்

இதுகுறித்து மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் செயலாளர் எம்.எஸ்.குகன் கூறியதாவது:- 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்கள் கிளப்பில் 150 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு வெகு தூர பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி இந்த ஆண்டு ஊட்டியில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டோம். கோடை சீசனில் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது நடத்தப்பட்டு உள்ளது. பழங்கால வாகனங்களை பாதுகாத்தல், சீரமைத்தல் மற்றும் வெளிஉலகுக்கு காட்சிப்படுத்துவதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையாளர்களை கவர்ந்த நீல நிற கார்

ஊட்டியில் பழங்கால வாகன அணிவகுப்பில், போர்டு நிறுவனத்தால் 1929-ம் ஆண்டு தயாரித்து, விற்பனை செய்யப்பட்ட நீல நிற கார் இடம்பெற்றது. இந்த கார் ஊட்டியில் வாங்கப்பட்டதோடு, மிகவும் பழமையான கார் ஆகும். அணிவகுப்பின் போது சென்ற இந்த காரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்