கயத்தாறு கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலில் திருட்டு போன சிலை பிரான்சில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கயத்தாறுக்கு வந்து விசாரணை நடத்தினர்.;

Update: 2022-12-17 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலில் திருட்டு போன சிலை பிரான்சில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கயத்தாறுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

திருடுபோன நடராஜர் சிலை மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பழமைவாய்ந்த அகிலாண்ட ஈசுவரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவில் உள்ளது. இங்கு 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போனது.

இந்த நடராஜர் சிலையானது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஏலக்கடையில் ஏலம் விடப்பட இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பாரீசில் நடராஜர் சிலையை ஏலம் விடப்படாமல் தடுத்து, இந்திய தூதரகம் மூலம் சிலையை மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சமீர் பானு, சப்-இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் ஆகியார் அடங்கிய குழுவினர் நேற்று கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர். பாரீசில் உள்ள நடராஜர் சிலையை மீட்டு 3 மாதங்களில் கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

கோவில் ஆய்வாளர் சிவகலை பிரியா, நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்