போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்-கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
பட்டணம்காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பனைக்குளம்
பட்டணம்காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் சித்ரா மருது தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், ஊராட்சி துணை தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ம.க. மாவட்ட தலைவர் ஹக்கீம் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தார். அதனை தொடர்ந்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் போதைப்பொருள் விற்பவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துதல் உள்பட அடிப்படை வசதிகளை துரிதமாக நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் செய்திருந்தார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி தலைவர் சித்ரா மருது தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்பு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஊராட்சி
இதேபோல ஊராட்சி தலைவர்கள் அழகன்குளம் வள்ளி, ஆற்றாங்கரை முகமது அலி ஜின்னா, ரெட்டையூரணி கணேசன், இருமேனி சிவக்குமார், என்மனங்கொண்டான் கார்மேகம், காரான் சக்திவேல், கீழநாகாச்சி ராணி, கும்பரம் துளசிதேவி, கோரவள்ளி கோகிலாவாணி, சாத்தக்கோன்வலசை நாகேசுவரி, செம்படையார்குளம் கண்ணம்மாள், தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, தேர்போகி மோகன்குமார், பனைக்குளம் பவுசியாபானு, பிரப்பன்வலசை கலா உடையார், புதுமடம் காமில்உசேன், புதுவலசை மீரான்ஒலி, பெருங்குளம் கோ.சிவக்குமார், மரைக்காயர்பட்டினம் பைரோஸ் ஆசியம்மாள், மானாங்குடி பரமேசுவரி, வாலாந்தரவை முத்தமிழ்செல்வி, வெள்ளரிஓடை சந்திரசேகர், வேதாளை செய்யது அல்லாபிச்சை, நொச்சியூரணி சீனி அரசு, பாம்பன் அகிலா பேட்ரிக், தங்கச்சிமடம் குயின்மேரி, ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஹமிதியா ராணி ஜாகீர் உசேன், அத்தியூத்து அப்துல் மாலிக், சித்தார்கோட்டை முஸ்தரி ஜஹான் ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.