போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2023-08-11 18:45 GMT

திருவாரூரில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உடனிருந்தார். முன்னதாக போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்து கொண்டனர். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டதை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் துணை கலெக்டர் (கலால்) அழகர்சாமி, தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் கொறுக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கண்ணன், கல்லூரியின் துணைத்தலைவர் ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. அங்கு மதுவுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

குடவாசல்

குடவாசல் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டாரக்கல்வி அலுவலர் குமரேசன் தலைமை தாங்கினார். அலுவலர்கள் ராஜேஸ்வரன், ராதாகிருஷ்ணன், சுமத்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதேபோல் குடவாசல், சற்குணேஸ்வரபுரம், வயலூர், அன்னியூர், திருவீழிமிழலை, எரவாஞ்சேரி உள்ளிட்ட 92 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

வலங்கைமான்

வலங்கைமான் கடைத்தெருவில் மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்